அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆறு கடல் போன்ற புனித நீர் நிலையங்களில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

அந்த வகையில் இன்று தை அமாவாசை வருகிறது. குறிப்பாக தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது இன்னும் விசேஷமானது. அதிகாலை 01.20 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 02.31 வரை தை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம்.

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும். இன்று தை அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.