இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால், போட்டி விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட காலமாக அவர் எதிர்கொண்டு வந்த மூட்டுப் பிரச்சனையால், விளையாட்டுக்குத் தேவையான உடல் திறனைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே காரணம் என தெரிவித்தார்.

தனது ஓய்வு குறித்த அணுகுமுறையை விளக்கிய சாய்னா, நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்தி விட்டேன். என் விருப்பப்படி விளையாட்டில் நுழைந்து, என் விருப்பப்படியே வெளியேறினேன். அதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன் எனக் கூறினார்.

உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா, தனது ஓய்வு முடிவுக்குக் காரணம் மூட்டில் ஏற்பட்ட தீவிர பிரச்சினை தான் என்றும், இதனால் தொடர்ச்சியான பயிற்சி மேற்கொள்வது முடியாத காரியமாகி விட்டதாகவும் தெரிவித்தார். தனது மருத்துவ நிலைமையை விவரித்த அவர், என் குருத்தெலும்பு முற்றிலும் சிதைந்து விட்டது, எனக்கு மூட்டுவலி உள்ளது. இதை என் பெற்றோரும், பயிற்சியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்களிடம் இனி என்னால் விளையாட முடியாது, இது கடினம் என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.