இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் நேற்று முன்தினம் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதில்தான் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா. இந்நிலையில், தற்போது பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான நட்பு மற்றும் நான் கொண்டுள்ள மதிப்பு காரணமாக அவரது கோரிக்கையை ஏற்று வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து முடித்துள்ளோம். அந்த வகையில் பரஸ்பர வரி விதிப்பு 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். இந்தியாவுடனான உறவு முன்பை விடவும் வரும் நாட்களில் வலுவாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்தார். பிரதமர் மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய பிறகு இந்த பதிவு அவர் வெளியிட்டார். இதற்கு பிரதமர் மோடியும் இந்திய மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.