தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன. தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வாறே தொடரும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தெரிவித்து வருகின்றன. மறுபுறம் அ.தி.மு.க. தரப்பு பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து வருகிறது. இதனிடையே கூட்டணி இல்லாமல் போட்டி எனக்கூறி கட்சித் தொடங்கிய விஜய் தரப்பும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் சி.பி.ஐ. விசாரணை, ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் இழுபறி போன்றவை அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்காக விஜய்க்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணலின்போது, அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு சில நாட்களில் புதிய கட்சி வரவுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது, மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அ.தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், நம்பிக்கையுடன் இருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகமா இருக்குமோ என பலரும் யூகித்து வருகின்றனர்.