தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது மகளிர் உரிமைத்தொகை திட்டம். தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்த அறிவிப்புதான் கதாநாயகனாக அமைந்தது. அதை தொடர்ந்து 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. இதற்காக, மாதந்தோறும் ரூ.1,137 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வர இருக்கிறது என்று கூறினார். அதாவது, மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்துவது தான் அந்த இனிப்பான செய்தி என்று தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், சட்டசபையில் வரும் 20-ம் தேதி கவர்னர் ஆற்றும் உரையில் அந்த அறிவிப்பு இடம்பெறுமா?, அல்லது தொடர்ந்து தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறுமா?, அல்லது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தான் இடம்பெறுமா? என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.