பிரதமர் மோடி இன்று (23-ம் தேதி) கேரளா செல்கிறார். திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் ரெயில்வே விழாவில் பங்கேற்கும் அவர், புதிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

நாகர்கோவில் - மங்களூர், திருவனந்தபுரம் - தாம்பரம், திருவனந்தபுரம் - ஐதராபாத் வழித்தடங்களில் அம்ரித் பாரத் ரெயில்கள் மற்றும் குருவாயூர் - திருச்சூர் இடையேயான பயணிகள் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர், புதுமை, தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேம்பாட்டு வரைபடத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் அவர் திருவனந்தபுரம் செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து அவர் ரோடு ஷோவாக விழா நடைபெற புத்திரிக்கண்டம் மைதானத்திற்கு காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர். புத்திரிக்கண்டம் திடலில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு கட்சியினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.