அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
பன்னெடுங்காலமாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிவரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத் தகுந்தது. அவ்வகையில், இந்த ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர்.
அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகனுக்கு 2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழிக்கு வழங்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனை செல்வனுக்கு வழங்கப்படுகிறது. எழுத்தாளரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்புக்கு திரு.வி.க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் யுகபாரதிக்கு தமிழ்நாடு அரசின் 2025-ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதும், காமராஜர் விருது எஸ்.எம்.இதயத்துல்லாவிற்கும், மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவிற்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள். மேற்குறிப்பிட்ட விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான 16-ம் தேதி அன்று விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.