அன்புமணியுடன் கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ம.க தந்தை, மகன் என இரு அணியாக பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி, சென்னை பசுமை சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அவருடன் நேரடியாக சந்திப்பு நடத்தினார். இதில், பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இணைவதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது,
அன்புமணி கூட்டணி ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா என்பது எனக்குத் தெரியாது. நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை. அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு பா.ம.க.வை வளர்த்திருக்கிறேன். கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து ஒன்றிய அமைச்சராக்கினேன். அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வில் இருந்து நீக்கினேன். பா.ம.க. என்னிடம்தான் உள்ளது. பா.ம.க. தொண்டர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். நான் பாசத்தோடு வளர்த்த சிலர், கார் மற்றும் பணம் கொடுப்பார்கள் என்று அன்புமணியிடம் சென்று விட்டனர்.
சிலர் மட்டும் பணம், பதவிக்காக அன்புமணியிடம் சென்றுள்ளனர். பணம் கொடுப்பார் என்பதற்காக அன்புமணியுடன் படம் எடுத்துக் கொள்கிறார்கள். அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தந்தைக்கே துரோகம் செய்த அன்புமணி கும்பலுக்கா என மக்கள் நினைப்பார்கள். அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு, என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைப்பதே பா.ம.க கூட்டணி, நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.