அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு அதி நவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பொதுமக்களுக்கும், பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான முதன்மைத் தேர்வாக விளங்கி வருகின்றன.
கடந்த 24.12.2025 அன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து முதல்வரின் உத்தரவின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற ஏர் சஸ்பென்ஸன் வசதி செய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதியானது அதிகரிக்கப்பட்ட இடத்துடன் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி அமைக்கப்பட்டுள்ளது. நடத்துனர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி, டிஜிட்டல் கடிகராம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காக போதிய இடவசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளின் என்ஜின் அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் நிறுவப்பட்டுள்ளது. இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானிக்கும் தீ கட்டுபாட்டு அமைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் நேற்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.