ராமராஜன் - கனகா நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். கிராமத்து மண் வாசனையில், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பட்டி.. தொட்டி.. எங்கும் பட்டையை கிளப்பியது. நடிகை தேவிகாவின் மகளான கனகா, கடகாட்டக்காரன் படத்தின் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்துடன் திரையுலகை விட்டு விடைபெற்று விடலாம் என்று அவர் நினைத்தபோதும், படத்தின் மெகா ஹிட், அதன் மூலம் கிடைத்த புகழ், அவரை தொடர்ந்து நடிக்க வைத்தது.

அதை தொடர்ந்து பிசியாக நடிக்க தொடங்கிய நடிகை கனகா, ரஜினியுடன் 'அதிசய பிறவி, பிரபுவுடன் கும்பக்கரை தங்கையா, விஜயகாந்துடன் கோவில் காளை, கார்த்திக்குடன் பெரிய வீட்டு பண்ணைக்காரன், சரத்குமாருடன் சாமுண்டி என 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் வெளியான நரசிம்மம் என்ற படத்தில் கனகா நடித்தார். அதன்பின்னர், தாய் தேவிகா இறந்த சோகத்தில் நடிப்பைவிட்டு விலகிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். தந்தையுடனும் சொத்து விஷயத்தில் மோதல் ஏற்பட்டதால், அங்கேயே தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவை சென்று சந்தித்த படத்தை வலைதளத்தில் வெளியிட்டார். படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு அடையாளமே காண முடியாத வகையில் கனகா இருந்தார். இந்த நிலையில், 36 ஆண்டுகளுக்கு பிறகு முத்தையா - காமாட்சி ஜோடி (ராமராஜன் - கனகா) சென்னையில் ஒருசில தினங்களுக்கு முன்பு சந்தித்துள்ளனர். அந்தப் படம் வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பலர் நெகிழ்ச்சியில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.