சென்னை, செப். 22-

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள 2 அமைச்சர் பதவியால் எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை என முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2 அமைச்சர் பதவியாலோ, ராஜ்யசபா எம்பி பதவியாலோ எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை. ராகுல்காந்தி பிரதமரானால்தான் மாற்றம் வரும் என தெரிவித்திருக்கிறார்.

அண்மைக்காலமாக பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெக, காங்கிரஸ் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கூறி வருகிறார்கள்.

ஆனால் வரும் 2029ஆம் ஆண்டில் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தது. எனினும் இதுவரை முதல்வர் விஜய்யோ, அமைச்சர்களோ ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை.இதனால் இந்த மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழக அமைச்சரவையில் இருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம் என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இந்த பிரச்சினையை சற்று ஆற போட இரு தரப்பிலும் உத்தரவுகள் வந்ததா தெரியவில்லை, இது குறித்து பேச்சுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது செல்வப்பெருந்தகை மீண்டும் மீண்டும் அந்த பிரச்சினையை கிளப்பி வருவதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்றால், அவர்தான் வேட்பாளர் என்பதை கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த கூட்டணியில் ஏன் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு மாநிலங்களவை எம்பி பிரவீன் சக்கரவர்த்தி பேசுகையில், கூட்டணி குறித்து கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார்? இதற்கு முன்பு அவர் காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை, அப்படியிருக்கும் போது இந்த கருத்துகளை எல்லாம் பேசித்தான் ஆக வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு செல்வப்பெருந்தகையும் நீண்ட ஒரு பதிலடியை கொடுத்திருந்தார். அதில் கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?

அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.

உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே. முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

அது போல் அண்மைக்காலமாக செல்வப்பெருந்தகை கொடுக்கும் பேட்டிகளில் திமுகவுக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் பேட்டியில், “ ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்ய தவறிவிட்டதோ என்ற வேதனை எனக்குள் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்காக ஸ்டாலின் கடுமையாக உழைத்தார், ஆனால் அவருக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் இப்போதும் எங்களுக்கு இருக்கிறது” என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.