தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 181-ல் அறிவித்தபடி, தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம். தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலும், அதனைத் தொடர்ந்த கைது நடவடிக்கைகளும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் தையல், ஓவியம், கணினி, இசை மற்றும் உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுப்பதற்காக 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களில், போதிய வருமானமின்றி பலர் வாழ்வாதாரத்திற்காகப் பிற வேலைகளுக்குச் சென்றனர். இதன் காரணமாக, தற்போது சுமார் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போதைய ஆளும் கட்சி, தனது தேர்தல் வாக்குறுதி எண் 181-ல் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் '181' என எழுதி நூதன முறையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளாக தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், பணியின் போது உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதற்கு முன்னதாக அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், காவல்துறையினரின் தலையீட்டால் பதற்றமாக மாறியது. போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் பெண் ஆசிரியர்கள் உட்படப் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு உடனடியாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.