சென்னை, செப். 27-
ஜெம் வீரமணி வழக்கை தவெக வெளிக்கொண்டு வந்ததாக சொல்வது தவறு. இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்தது ஏன் என்று பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார்.தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கில் விரிவான விசாரணை நடத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் தரமணி 100 அடி சாலை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளாக கலந்து ெகாண்டு ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி காலத்தில் புகார் அளிக்கப்படுகிறது. முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. எப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு ஏன் மேல் விசாரணை நடத்தப்படவில்லை. அந்த வீடியோ தெளிவாக இல்லை என்று ஒற்றை காரணத்தை சொல்லி இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறேன்.
அதிமுக, திமுக ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் கூட்டாக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று இருக்கிறார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய் கை மாறப்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். காலவரையறையுடன் இதுபோன்ற வழக்குகளில் தண்டனை வழங்கப்பட வேண்டும். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் வீரமணி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததற்கு காரணம் தவெக அரசு அல்ல.
இந்த வழக்கை தவெக அரசு வெளிக் கொண்டு வந்ததாக சொல்வது தவறு. இந்த வழக்கை தவெக அரசு முடிக்கவே பார்த்தது. ஜெம் வீரமணி வழக்கு பெண் நீதிபதியின் உத்தரவால் தான் மீண்டும் இந்த வழக்கு வெளி உலகத்திற்கு தெரிந்துள்ளது. தவெக அரசு கொண்டு வந்தோம் என்று சொல்வது உண்மையானால், ஆகஸ்ட் மாதம் 19ம்தேதி தமிழக அரசு வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை ஏன் தாக்கல் செய்தது?. இந்த வழக்கு தொடர்பான புதிய ஆதாரங்கள் இருப்பதால் வழக்கு தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் தவெக அரசு ஏன் கோரவில்லை.
இதுபோன்று செய்திருந்தால் தவெக அமைச்சர்கள் நாங்கள் தான் இந்த வழக்கை வெளியில் கொண்டு வந்தோம் என்று சொல்வதில் நியாயமாக இருந்திருக்கும். தவெக அரசு வழக்கை முடிப்பதற்கு தான் ஜெம் வீரமணி வழக்கில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார்கள். ஒருவேளை நீதிமன்றத்தில் இவர்கள் சமர்ப்பித்த அறிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்திருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நிலைமை என்னவாகி இருக்கும். எனவே ஜெம் வீரமணி வழக்கை அதிமுக, திமுக, தவெக என 3 கட்சிகளுமே சரியாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஜெம் வீரமணி வழக்கு தீவிரப்படுத்தப்பட்டது மற்றும் கைது நடவடிக்கைக்கு நீதிபதி உத்தரவுதான் காரணமே தவிர தமிழக அரசு காரணம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் தமிழ்நாடு அரசால் காவல்துறை ஆணையர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஏற்கனவே அவர்கள் தப்பித்து செல்லும் வழிகள் உருவாக்கப்பட்ட அனுபவம் உள்ள சூழலில், காவல் ஆணையர் மேற்பார்வையிலான விசாரணை என்பது பொருத்தமானதல்ல. ஆகவே, உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.