சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக பராசக்தி படம் களமிறக்கப்படுவதாக விஜய் ரசிகர்களால், படம் ரிலீசுக்கு முன்பே விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஒரு படத்தை அது சென்றடைய வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்ல, முன்பே ஒரு குழுவாக பெரிய வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த மார்க்கெட்டிங் யுகத்தில் படக்குழுவாக அதை செய்ய வேண்டும். ஒரு படத்தை ரிலீஸ் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது. பொங்கல் வார இறுதியில் படம் பெரும்பான்மையான ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும், சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட கருத்தை சுதா கொங்கரா வாசித்தார். அந்த பதிவில்,

சி.பி.எப்.சி.கிட்ட வாங்குறது பெருசு இல்லை. அண்ணா பேன்ஸ்-கிட்ட சாரி கேட்டு, மன்னிப்பு சர்டிபிகேட் வாங்கு. இன்னும் ஒரு வாரம் இருக்கு. அவங்க மன்னிச்சு விட்டா பராசக்தி படம் ஓடும் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனை மேற்கோள் காட்டி பேசிய சுதா கொங்கரா, படம் வெளியாகாத நடிகரின் ரசிகர்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் வருகின்றன. அவரின் ரசிகர்கள்தான் இதைச் செய்கிறார்கள். இதுதான் நாங்கள் எதிர்த்து போராடும் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம் என்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களை ரவுடிகள் என மறைமுகமாக சுதா கொங்கரா விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.