கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்கு முன்பாக, கடந்த நவம்பர் 25-ம் தேதி த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களோடு, த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர். சி.பி.ஐ. அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.

அதை தொடர்ந்து டிசம்பர் 4-ம் தேதி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அதில், நாளை 12-ம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், விஜய்யின் பிரச்சார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். பனையூரில் இருந்து கரூர் எடுத்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். விஜய்யின் பிரசார வாகன டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.