தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயகன் படப் பிரச்சினை, சி.பி.ஐ. விசாரணை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை விஜய் சந்தித்து வரும் நிலையில், த.வெ.க.விற்கு பொதுச் சின்னம் கிடைக்குமா? என்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக அக்கட்சி தொண்டர்கள் இடையே விவாதம் அதிகரித்தது.

இந்த நிலையில், விஜய்யின் த.வெ.க.விற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பொதுச்சின்னம் அளிக்கக்கோரி விஜய் தரப்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விசில், கால்பந்து, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்கள் அடங்கிய பட்டியலில் தவெக சார்பில் வழங்கப்பட்டதை அடுத்து கோரிக்கை ஏற்கப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத கட்சியான த.வெ.க, ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்ததால் பொது சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. தற்போதைய சின்னம் ஒதுக்கீடு 2026 தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. த.வெ.க. போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு வேட்பாளருக்கு வழங்கப்படும். முதல் தேர்தலிலேயே பொது சின்னத்துடன் விஜய்யின் த.வெ.க. களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.