சென்னை: முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோரிய வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றார்.

தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி கடந்த 2025ம் ஆண்டு டிச.24ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டும் என்று சங்கீதா கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த ஜூன் 15ம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். வீடியோ கான்பரன்சிங் விசாரணை இல்லை என கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஆகஸ்ட் 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சட்டசபை நடப்பதால் விவாகரத்து வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்றே விசாரிக்க வேண்டும் என வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான சங்கீதா வைத்த கோரிக்கையை ஏற்று, பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்து செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பிறகு மதியம் 1 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது காணொலி வாயிலாக சங்கீதா சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது நீதிபதியிடம் வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைப்பதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.