மதுரை, அக்.6-
மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழுவில் முறைகேடு குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் (டி.எம்.ஏ.,) விசாரணை எப்போது வெளியாகும்’ என அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முறைகேடு சம்பந்தமாக பூதாகரம் கிளம்பியுள்ளது.
மாநகராட்சியின் நிலைக் குழுக்களில் நகரமைப்புக் குழு முக்கியமானது. இதன் தலைவராக தி.மு.க., கவுன்சிலர் மூவேந்திரன் இருந்தார். இவர் மாநகராட்சி அனுமதியின்றி தன்னிச்சையாக பல்வேறு கட்டடங்களுக்கு பணி நிறைவுச் சான்று வழங்கி முறைகேடு செய்ததாக 2024ல் புகாரானது. அவரது நகரமைப்புக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அக்குழு செயல்பாடும் நிறுத்திவைக்கப்பட்டது. இம்முறைகேடு குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் (டி.எம்.ஏ.,) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் விசாரணையும் நடைபெற்றது. இதுவரை விசாரணை ஆணை குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது நிலைக்குழு ஒப்புதல் இன்றி புதிய கட்டட வரைபட அனுமதியை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு நேரடியாக வழங்குகிறது. ஆனால் முறைகேடு குறித்து யார் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை.
குறிப்பாக மத்திய மண்டலத்தில் புதிதாக சேலத்தில் இருந்து பணியில் சேர்ந்துள்ள கண்காணிப்பாளர் பார்த்தசாரதி மற்றும் உதவி நகரமைப்பு அதிகாரி இருவரும் சேர்ந்து 52-வது வார்டில் உள்ள வடக்கு ஆவணிமூல வீதி, கீழபட்டம்மார் வீதி, மேல பட்டம்மார் வீதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் தங்கும் விடுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை புகார் நேரில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு நேர்மையான அதிகாரியை நியமித்து அளவீடு செய்தால் மாநகராட்சிக்கு பல கோடி வருமானம் கிடைக்கும்.
இந்நிலையில் கடந்த செப்.30ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கூறியதாவது:-
நிலைக்குழு ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு நேரடியாக வரைபட அனுமதி வழங்கலாம். முறைகேடு குறித்து டி.எம்.ஏ., விசாரணையின் தற்போதைய நிலை என்ன’ என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக முடங்கிய இம்முறைகேடு விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் சொத்துவரி முறைகேடு விவகாரத்தை தற்போது த.வெ.க., ஆட்சியில் விசாரணை சூடுபிடித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே நகரமைப்பு குழு முறைகேடு விவகாரம் வெளியானது. ஆனால் இதுவரை அம்முறைகேடு தொடர்பான விசாரணை கிடப்பில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் கேள்வி கேட்டோம். ஆனால் இப்போதும் டி.எம்.ஏ., விசாரணை நடக்கிறது. அதன் நிலை குறித்து கேட்டு தெரிவிக்கிறேன்’ என கமிஷனர் பதில் அளிக்கிறார். டி.எம்.ஏ., விசாரணை துாங்குகிறதா? தி.மு.க.,வில் உள்ளது போலவே த.வெ.க., ஆட்சியிலும் அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது. துாய ஆட்சி எனக் கூறும் ஆளுங்கட்சி இம்முறைகேடு குறித்தும் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.