மதுரை, அக். 6-

பாஜ முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது பாஜகவின் முன்னாள் பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்தார்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிவிட்டு அதனை கலைத்து ஏமாற்றியதாக கூறிய புகாரில் கருப்பு முருகானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில தான் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கருப்பு முருகானந்தம் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக பாஜகவில் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கருப்பு முருகானந்தம். இவர் மீது திருச்சியில் வசித்து வந்த பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்தார்.

புகார் அளித்த பெண்ணுக்கு கணவர் கிடையாது. 2 குழந்தைகள் உள்ளனர். முதலில் கர்நாடகா பாஜகவில் நிர்வாகியாக பணியாற்றினார். அதன்பிறகு தமிழ்நாடு வந்து திருச்சியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் அந்த பெண் கட்சி மேலிடத்துக்கு புகார் அளித்தார். அதில், ‘’நான் கருப்பு முருகானந்தத்தை அதிகமாக நம்பினேன். கருப்பு முருகானந்தம் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னுடைய குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் guardian என்று அவரது பெயர் உள்ளது. அவரை என் குழந்தைகள் ‘அப்பா’ என்று தான் அழைப்பார்கள். ஆனால் ஏமாற்றிவிட்டார்.

கர்நாடகாவில் இருந்து வந்த எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினார். அவருடனான உறவின் காரணமாக நான் கர்ப்பமானேன். கர்ப்பத்தை கலைத்தார். எனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி கேட்டபோது என்னையும், என்னுடைய குழந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கருப்பு முருகானந்தம் மற்றும் புகார் அளித்த அந்த பெண்ணின் பதவிகள் பறிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அந்த பெண் சார்பில் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கருப்பு முருகானந்தம் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீசாரின் கைது செய்ய வாய்ப்புள்ளது. இதனால் கருப்பு முருகானந்தம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ‘’பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த செப். 24ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நானும், அந்தப் பெண்ணும் மிக நெருக்கமாக இருந்ததாகவும் அவரை இழிவுபடுத்தும் வகையில் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறியிந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் என் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. என் மீது பொய்யான புகாரை அந்த பெண் அளித்துள்ளார். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கருப்பு முருகானந்தத்திற்கு முன்ஜாமீன் கிடைத்தால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பார். இல்லாவிட்டால் கைதாக கூட வாய்ப்புள்ளது.