கன்னிவாடி, செப். 23-
திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்திய மழையால் சளி, காய்ச்சல் பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதாரத்துறையும் கூடுதல் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.
பருவகால மாற்றங்களால் கோடை வெயில் கடந்து பல மாதங்களாகியும் தற்போது வரை பகலில் நீடிக்கும் வெயிலால் வெம்மை நோய்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இச்சூழலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மாலை நேரங்களில் சாரல் மழை தொடர்கிறது. இதற்கேற்ப மழைநீர் தேங்காத வகையில் பணிகளை மேற்கொள்வதில் உள்ளாட்சி நிர்வாகங்களின் அலட்சியம் நீடிக்கிறது.
திடக்கழிவு மேலாண்மை, சாக்கடை வாறுகால் கழிவுகளை அகற்றுவதில் தொய்வால் பல இடங்களில் வாறுகால் முழுவதும் மண் மேவியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு, மழைநீர் செல்ல வழியின்றி சூழ்ந்து கொண்டு கொசுக்கள் உற்பத்தி, தொற்றுநோய் பரவல் போன்ற சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
நிதி பற்றாக்குறை, துாய்மை காவலர்கள் காலி பணியிடம் அதிகரிப்பு போன்ற காரணங்களை கூறி உள்ளாட்சி நிர்வாகத்தினர் மட்டுமின்றி கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம், கொசுத்தொல்லை அதிகரிப்பு ஆகியன இவற்றின் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நோய் கண்காணிப்பு பணியாளர்களாக நியமிக்கப்பட்ட மஸ்துார் பணியாளர்கள் கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால் கொசுப்புழு ஆய்வு, ஒழிப்பு, கொசு மருந்து, புகை மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளிலும் தொய்வு நிலவுகிறது.
இதற்கிடையில் மாவட்டத்தில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பாதிப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளது. குழந்தைகள், முதியோர் எளிதில் பாதிப்படைகின்றனர். தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே நோய் கண்காணிப்பு, அனைத்து வீடுகளிலும் கொசுப்புழு ஆய்வு செய்வது, தண்ணீர் தேங்காத சூழலை கண்காணித்தல், கொசுப்புழு ஒழிப்புக்கான அபேட், குடிநீரில் குளோரினேஷன் தெளிப்பு, தண்ணீர் தேங்கும் கலன்களை அப்புறப்படுத்தல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்வது அவசியமாகிறது.
மழைக்கால அவசிய சூழல் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதார பராமரிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும்.