புதுடில்லி: மத்திய அமைச்சர் ஜேபி நட்டா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் ஜேபி நட்டா. திடீரென இவர் அசௌகரியமாகவும், கடும் சோர்வாகவும் உணர்ந்ததால் உடனடியாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நட்டாவுக்கு மருத்துவர்கள் குழு பலகட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக இதய ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் கரோனரி ஆஞ்சியோகிராபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைகளுக்கு பின்னர் நட்டா உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஓரிரு நாளில் பூரண நலன்பெற்று அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.