மதுரை, செப். 26-

செப்டம்பர் 28ல் முதலமைச்சர் விஜய் மதுரை வருவதை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனை எதிரே உள்ள சாக்கடையை தகர சீட் கொண்டு மறைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க விஜய் வரவுள்ளார். இதற்கான பணிகளை தவெகவினர் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.

தவெக தேர்தல் வாக்குறுதியில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தவெக ஆட்சி அமைத்த சூழலில், ஜூன் 23ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியது. அப்போது இந்த திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநா

ளன்று தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மாற்றப்பட்டது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்க இருக்கிறார். முதலில் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடங்கி வைப்பதாக இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் மதுரைக்கு தொடக்க விழாவை மாற்றினர். இந்த திட்டத்திற்கான டெண்டர் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு 70:30 என்ற வகையில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 1.20 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த தங்க மோதிரம் அளிக்கப்படும்.

அதேபோல் குழந்தை எந்த நாளில் வீடு திரும்புகிறதோ, அன்றைய தினம் தங்க மோதிரம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக முதல்வர் விஜய் மதுரை அரசு மருத்துவமனை வரவிருக்கும் சூழலில், அதற்கான ஏற்பாடுகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது.

ஏற்கனவே மதுரையின் முதல்வர் விஜய் பயணிக்க உள்ள சாலைகளில் புதிய சாலை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அடுத்தக் கட்டமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் சாக்கடையை தகர சீட் கொண்டு மறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மதுரை ராசாசி அரசு மருத்துவமனைக்கு எதிரே மிகப்பெரிய சாக்கடை ஒன்று அமைந்திருக்கிறது. அதனை பலகை கொண்டு மூட வேண்டும் என்று அப்பகுதியினர் நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் டெங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. தற்போது அதனை விஜய் பார்த்துவிடக் கூடாது என்று தகர சீட் கொண்டு மூடப்படுவதாக விமர்சனக்கள் எழுந்துள்ளன.