மதுரை, செப். 26-
மாநகராட்சி தூய்மைப்பணியை டெண்டர் எடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் நிறைவுபெற உள்ளதால், வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு களில் உள்ள குப்பை தெருவுக் கும், சாலைக்கும் வருவதால் திரும்பியபக்கமெல்லாம் குப்பை குவியல் அதிகரித்துளது.
மதுரை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 1,200 மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. ஒப்பந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 916 மெட்ரிக் டன் குப்பையை அகற்ற மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த நிறுவனம் தினசரி 800 முதல் 850 மெட்ரிக் டன் குப்பை மட்டுமே சேகரிக்கிறது. ஆனால், குப்பை சேகரிப்பு வாகனங்கள் பற்றாக்குறை, பழுது, டிரைவர்கள் ஒழுங்காக பணிக்கு வராதது, கூடுதல் டிரிப் செல்லாதது மற்றும் போதிய கண்காணிப்பு இல்லாதது, மாநகராட்சி நகரநலப் பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்காதது போன்ற பல்வேறு காரணங்கள், நிர்வாக குறைபாடுகளால் தற்போது வீடு, வீடாக குப்பை சேகரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளில் தேங்கும் குப்பை, தெருக்களுக்கே வருவதால் மாநகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பை குவியல்கள் காணப்படுகின்றன. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகரநலப் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ஒப்பந்த நிறுவனத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை கேள்வி கேட்கவும், கண்காணித்தும் நடவ டிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் மாநகராட்சி அதிகா ரிகள் சொன்னால் கேட்பதில்லை. கடந்த காலத்தில் அடங்கியிருந்த அவர்கள், தற்போது அதிகாரம் செலுத்துகின்றனர். ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகமும், கடந்த காலத்தைப் போல் கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறைந்துள்ளது. அதனாலும், தம்பார்டன் தங்கள ஒப்பந்தம் நிறைவு பெறுவதால் குப்பையை அகற்றும் பணியில் வேகம் காட்டவில்லை.
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தூய்மைப்பணி முடிந்துவிட்ட நிலையில், தற்போது முதல்வர் வருகையை முன்னிட்டு அவர் வரும் வழித்தடங்களில் குப்பை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து, குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும்போது, வீடுகளில் குப்பை சேகரிப்பு பணி பாதிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் வீடுகளில் குப்பை சேகரிப்பது முதன்மைப் பணியாகவும், தெருக்கள், சாலைகளில் குப்பைகளை அகற்றுவது இரண்டாவது பணியாகவும் கவனிக்கப்பட்டது. தற்போது அதுதலைகீழாக மாறி, வீடுகளில் குப்பை சேகரிப்பது இரண்டாவதாகவும், சாலைகள், தெருக்கள், முக்கிய நிகழ்வுகளுக்கு தூய்மைப்பணி மேற்கொள்வது முதன்மைப் பணியாகவும் பார்க்கப்படுகிறது.
தூய்மைப்பணியுடன் கழிப்பிட பராமரிப்பு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு கிடங்குகள் பராமரிப்பு என பல்வேறு பணிகள் நகரநலப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவற்றுடன் அன்றாட குப்பை கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்வது சிரமமாக உள்ளது, என்றனர்.
தொடக்கத்தில் மாநகராட்சி தூய்மைப்பணியை கண்காணித்து மாநகராட்சி அதிகாரி களுக்கு நெருக்கடி கொடுத்த அமைச்சர் தியாகராஜன் மற்றும் தவாக எம்எல்ஏ-க்கள் என ஆளுங்கட்சி தரப்பு முழுமையாக தற்போது மவுனமாகி விட்டதாகவும், அவர்கள் மவுனத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்ற கேள்விகள் பொது மக்களிடையே எழுந்துள்ளன.