கருப்பு, சிவப்பு மற்றும் நீலத்தின் கொள்கைகள் நிலைபெற வேண்டும்; தோழமை தான் மதவாதத்தையும், சர்வாதிகாரத்தையும் வீழ்த்தும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

தோழமை கட்சியினர் அத்தனை பேரும், இந்த நூற்றாண்டு ஆலமரத்தை வாழ்த்த ஒன்று கூடியிருக்கிறோம். இந்த ஒற்றுமைதான், இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒற்றுமை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்கைகள் இங்கு நிலைபெற வேண்டும். இந்த தோழமைதான், பாசிசத்தை ஒழிக்கும் - வீழ்த்தும். இந்தத் தோழமைதான், எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும்; இந்த தோழமைதான், மதவாதத்தை வீழ்த்தும் இந்த தோழமைதான், சர்வாதிகாரத்தை வீழ்த்தும். மதச்சார்பின்மை, சோசலிசம், சமநீதி, சமூகநீதி, பொதுவுடைமை, பொது உரிமை உள்ளிட்ட சொற்களை கேட்டாலே, பா.ஜ.க.வினருக்கு கசக்கிறது. நாடு இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும், ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. நாம் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

சமீபத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் கவனத்தை செலுத்தி, நம்முடைய எண்ணத்தை சிதறவிட்டுவிட வேண்டாம்; மெத்தனமாக இருந்துவிட வேண்டாம். மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழகத்தில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி, பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும். ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ம.ம.க. தலைவர் ஜவாகிருல்லா, த.வா.க. தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.