மணிப்பூரின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்ததால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினர் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனர். இந்த வன்முறை காரணமாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி மாநில முதல்வர் பதவியை பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரேன் சிங் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மணிப்பூர் பா.ஜ.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக அவர் புதன்கிழமை பதவியேற்றார். இந்த நிலையில், குகி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் புதிய அரசின் இணைந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-ஜோ அமைப்புகள் சுராசந்த்பூா் மாவட்டம் துய்மோங்கில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டன.

சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர் அரசில் இணைந்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் டயா்களுக்கு தீ வைத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவானது. நேற்று காலை, தடியுடன் வந்த பந்த் ஆதரவாளர்கள் மாவட்டத் தலைமையிட நகரத்தின் சில பகுதிகளில் வாகனங்களை மறித்தனர். மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மாவட்டத் தலைமையிட நகரத்தின் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.