தமிழக அரசின் முதல்வர் தனிப்பிரிவு, சிஎம் ஹெல்ப்லைன் மற்றும் தமிழ்நாடு அரசு இணையதளங்கள் வாயிலாகப் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உரிய தீர்வு கிடைக்கிறதா என சமூக ஆர்வலர் டாக்டர். சர்மேஸ்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில் அரசு பல்வேறு புகார் அளிக்கும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இவ்வாறு பதிவு செய்யப்படும் புகார்கள் முறையாக விசாரிக்கப்பட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல், தீர்வு காணப்பட்டதாகப் பதிவு செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். புகார் அளித்தவர்களுக்கு முறையான பதில் வழங்கப்படுகிறதா, சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா, புகார்களுக்குத் தீர்வு காண நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பின்பற்றப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புகார்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், தீர்வு காணப்படாத புகார்களை மீண்டும் ஆய்வு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

புகார்களைப் பதிவு செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறையில் தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் கானின் வலியுறுத்தலாகும்.