தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு வந்திருந்தார். புதுக்கோட்டையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற பிரசார பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் இரவு திருச்சி சென்ற அமித்ஷா, கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

அதை தொடர்ந்து நேற்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலுக்கு சென்று அமித்ஷா தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட அமித்ஷா மன்னார்புரம் ராணுவ மைதானத்திற்கு வருகை தந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் அமித்ஷா கலந்து கொண்டார். பிரதமர் மோடி ஏர் கலைப்பையை தோளில் சுமந்தவாறு கூடிய சிறிய கட்அவுட்டுடன் பிரம்மாண்ட மேடை, சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்த மைதானத்தில் பொங்கல் வைப்பதற்றாக 2 ஆயிரம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், 1,008 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. முன்னதாக இன்று காலை முதலே விழா நடைபெற்ற மைதானத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் பட்டுச்சேலை அணிந்தும், ஆண்கள் பட்டுவேட்டி, சட்டை அணிந்தும் குடும்பத்துடன் திரண்டனர். அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.