மதுரை, அக். 17:


மருத்துவத் துறையின் சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, அவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியையும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (17.10.2026) தொடங்கி வைத்தார்.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, செவிலியர்கள் தங்களது பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கான புத்தாக்கப் பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.


அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவர்களுடன் இணைந்து செவிலியர்கள் வழங்கும் சேவை மிகவும் முக்கியமானதாகும். நோயாளிகளைக் கவனித்தல், சிகிச்சை நடைமுறைகளுக்கு உதவுதல், மருந்துகள் வழங்குவதில் மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செவிலியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.


அந்த வகையில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன், அவர்களது பணித்திறனை மேம்படுத்தும் வகையில் புத்தாக்கப் பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவப் பணிகளில் புதியதாக இணையும் செவிலியர்கள் தங்களது பொறுப்புகளைப் புரிந்துகொண்டு, நோயாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சேவைகளை வலுப்படுத்துவதில் இத்தகைய பணி நியமனங்களும் பயிற்சிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.


இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை, மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் . எஸ்.ஆர். தங்கப்பாண்டி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் . எம்.எம். கோபிசன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் . ம. விஜய் மற்றும் மாநகராட்சி துணை மேயர் திரு. தி. நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


புதிதாகப் பணியில் சேரும் செவிலியர்கள் தங்களது மருத்துவச் சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு உரிய கவனிப்பையும் தரமான சிகிச்சைச் சேவைகளையும் வழங்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.