புதுக்கோட்டை::புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சில மாணவிகளை கதண்டு வண்டு கடித்ததில், அவர்கள் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்ட அவர், மாணவிகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது தனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாணவிகளுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அவர்களின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தார்.
இந்நிகழ்வின்போது மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உடனிருந்தனர்.