தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ், 2026–2027-ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுப் பிரீமியம் தொகை முழுமையாகப் பிடித்தம் செய்யப்பட்டும், மருத்துவச் சிகிச்சை பெறுவதில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதாகத் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
டயாலிசிஸ், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, இருதய அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளை அணுகும் ஊராட்சி செயலர்களிடம், பிரீமியம் செலுத்திய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனக் கூறி, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான கட்டணத்தை வழங்க மறுப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், முறையாகப் பிரீமியம் செலுத்தியும் மருத்துவக் காப்பீட்டின் பயனைப் பெற முடியாமல் ஊராட்சி செயலர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டியவர்கள் மற்றும் அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஏற்படும் நிதி நெருக்கடியும் சிகிச்சைத் தாமதமும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதாகச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
85 நாட்களாக நீடிக்கும் பிரச்சினை
காப்பீட்டுப் பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு 85 நாட்களைக் கடந்தும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஊராட்சி செயலர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதுடன், அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், 01.07.2026 முதல் NHIS திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவச் சிகிச்சைக்கான நிலுவைத் தொகைகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் எனச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
இதுதொடர்பாக, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ. ஜான்போஸ்கோ பிரகாஷ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை மற்றும் மனு அனுப்பியுள்ளார்.
அதில், காப்பீட்டுப் பிரீமியம் தொகை செலுத்தப்பட்டுள்ள அனைத்து கிராம ஊராட்சி செயலர்களும் NHIS திட்டத்தின் கீழ் எவ்விதத் தடையுமின்றி மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இணையதளத்தில் பிரீமியம் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதில் உள்ள தாமதங்களைச் சரிசெய்து, காப்பீட்டுப் பயன்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பணியாளர்களுக்கான பிரீமியம் தொகையைப் பிடித்தம் செய்வதுடன் அரசின் கடமை முடிந்துவிடாது; அவர்கள் தேவைப்படும் நேரத்தில் காப்பீட்டுப் பயனைப் பெறுவதற்கும் உரிய நிர்வாக நடவடிக்கைகள் அவசியம் எனச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் குமார், பொருளாளர் விவேகானந்தன் மற்றும் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாசு ஆகியோரும், ஊராட்சி செயலர்களின் மருத்துவச் சிகிச்சை உரிமையை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஊராட்சி செயலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு பெறுவதில் சிக்கல்: தீர்வு காண நடவடிக்கை – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பொது நிதியின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதில் நிலவி வரும் சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பொது நிதியில் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதிலும், சிகிச்சைக்கான செலவுத் தொகையைப் பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஊரக வளர்ச்சித் துறை ஆணையரகம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது பணியாளர்களின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுவதில் சிக்கல் இருந்தால் தொடர்புகொள்ளலாம்
கடந்த 01.07.2026 முதல் இதுவரை மருத்துவச் சிகிச்சை பெற்று அதற்கான தொகையைப் பெறாமல் இருப்பவர்கள், இனி சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டின் கீழ் சிகிச்சை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் மாநில நோடல் அலுவலர் அய்யாச்சாமியை 91500 66977 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தொடர்புகொள்ளும் பணியாளர்களின் விவரங்களுக்கு முன்னுரிமை அளித்து, சிகிச்சை மேற்கொள்வதற்கும் சிகிச்சைக்கான செலவுத் தொகையைப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை பெறவும் அறிவுறுத்தல்
மாவட்ட அளவில் மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக மாவட்ட நோடல் அலுவலர்களின் தொலைபேசி விவரங்கள் தனியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டப் பணியாளர்கள் மேலும் ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு அடையாள அட்டைகளைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவக் காப்பீடு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் சில நாட்களில் முழுமையாகத் தீர்க்கப்பட்டு, பணியாளர்கள் வழக்கம்போல் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊரக வளர்ச்சித் துறை ஆணையரகத்திலிருந்து மாநில மையத்துக்குக் கிடைத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான நோடல் அலுவலரின் தொலைபேசி எண் என்பதால், மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சினை தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே தொடர்புகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சங்கத்தின் மாநில மையம் கேட்டுக்கொண்டுள்ளது.