மதுரை:

மதுரை மாவட்டத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான் நடைபெற்றது.

மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் இன்று (10.10.2026) நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு மாரத்தான், தீவிர தகவல், கல்வி மற்றும் தொடர்பு பிரச்சாரத்தின் (Intensified IEC Campaign 3.0) ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கிலிருந்து புறப்பட்ட மாரத்தான், மாவட்ட நீதிமன்றம், கே.கே. நகர் பிரதான சாலை, ஆவின் சந்திப்பு, திருவள்ளுவர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ் சங்கம், ராஜமுத்தையா மன்றம் வழியாகச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்தை வந்தடைந்தது.

எச்.ஐ.வி./எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பான வாழ்க்கை முறை மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டாமல் மனிதநேயத்துடன் நடந்துகொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இம்மாரத்தானின் முக்கிய நோக்கமாகும்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, எச்.ஐ.வி./எய்ட்ஸ் இல்லாத விழிப்புணர்வுமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான செய்தியைப் பொதுமக்களிடம் எடுத்துச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு துணை இயக்குநர் மகாராணி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.