டெஹ்ரான்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. தொடர்ந்து, 2025ல் இந்தோனேசியாவும் இணைந்ததால், முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சிமாநாடு, 'மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருகையின் போது, இருநாடுகளின் உறவு மற்றும் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வருகை தந்தார். அப்போது, அமெரிக்காவுடனான போர் நிறுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று கூறியதுடன், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தொடர்பாக உறுதியும் வழங்கினார். அமெரிக்காவுடனான போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்தியா வருகை, உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.