கடந்த 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, விடுதலை, வேட்டையன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் தீரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெல்லிசை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை வெப்பம் குளிர் மழை படத்தைத் தயாரித்த ஹேஷ்டேக் எப்டி.எப்.எஸ். புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இதில் தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் கிஷோர் தற்போது பிரதமர் மோடி குறித்து பேசியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நடிகர் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டியில், வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014-ம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றி விடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது என்று கூறியுள்ளார்.