டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் ரூ.762 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான மாதங்களில் பிரதமர் மோடி சுமார் 13 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இந்த 2026-ஆம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணப் பட்டியலில் நார்வே மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான பயணங்களுக்குத்தான் மிக அதிக அளவில் நிதி செலவிடப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி 7-8 தேதிகளில் மலேசியா சென்றதற்குக் கிட்டத்தட்ட ரூ. 5.57 கோடியும், பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேல் சென்றதற்கு ரூ. 11.92 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. அதே நேரம் மே முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில் கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, நார்வே மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் அதிகபட்சமாக நார்வே பயணத்திற்கு ரூ.17.46 கோடி செலவிட்டு உள்ளது. சீஷெல்ஸ் பயணத்திற்கு ரூ.8.22 கோடி செலவாகி உள்ளது. 2015-ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ரூ.762 கோடி செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.