தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பொதுப்பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று பட்டய பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நெடுஞ்சாலைத்துறையில் உதவிக்கோட்டப்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலைப்பொறியாளர் ஆகிய பதவிகளில் உள்ளவர்களுக்கு பல ஆண்டுகளாக பொதுப்பணி இடமாறுதல் வழங்கப்படவில்லை. இதனால் சில பொறியாளர்கள் வசதியாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இடமாறுதல் கிடைக்காத மற்ற பல பொறியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள அமைச்சர், பொறியாளர்களின் பணியிட மாறுதல் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இருப்பினும், வரும் 30.06.2026 தேதியுடன் ஒரு இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு இடமாறுதல் வழங்குவதற்கான எந்தவிதமான முன்னெடுப்புகளையும் முதன்மை இயக்குனர் மேற்கொள்வதாகத் தெரியவில்லை.


எனவே, இந்த ஆண்டு தடையின்றி பொறியாளர்களுக்கு பொதுப்பணியிட மாறுதல் நடைபெறுவதை உறுதி செய்ய, நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.