பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று முன்தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பதற்காக நடிகர் சூரி வந்து இருந்தார். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை நடிகர் சூரி பரிசளித்து சிறப்பித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சூரி கூறுகையில், ஜல்லிக்கட்டு கலாசாரம் இடையில் குறையக்கூடிய சூழல் வந்தது. மீண்டும் எழுச்சிபெற்று தற்போது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, காளை உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் காளை உரிமையாளருக்கு டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்படுகிறது.