சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்று வெளியிட்ட முதல்வர் விஜய், தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற 15 நாட்களுக்குள், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க கடந்த 25.05.2026 அன்று, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50,000 ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து, நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரை முழுத் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி, ரூ.75,000/- வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையையும், ரூ.75,000/-க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000/-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் 14.44 இலட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது. இதில், 31.07.2026 வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குப் பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.

* 75,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாக தள்ளுபடி.

* 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரை தள்ளுபடி.

* 1,00,000 ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி.

* இதன்மூலம், 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்குத் தலா 75,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இதனால், ஏற்கெனவே, பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக 40,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும். இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும், இருந்தாலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.