நல்ல விளைச்சலை கொடுத்து சிறப்பான அறுவடைக்கு உதவியாக இருந்த இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அறுவடைத் திருவிழா ஆகும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுவதுபோல் பிற மாநிலங்களில் பிஹு, மகர சங்கராந்தி, லோஹ்ரி என பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதில், லோஹ்ரி என்பது பஞ்சாப் மாநிலத்தில் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான அறுவடை திருவிழாவாகும்.

பாகிஸ்தானின் பஞ்சாப் பிராந்தியத்திலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள டக்கர் மற்றும் ஜம்மு பிராந்தியங்கள், அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. லோஹாடி அல்லது லால் லோய் என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.

சூரியன் மகர ராசிக்கு மாறும் நாளான மகர சங்கராந்தி தினத்திற்கு முந்தைய இரவு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது குளிர்காலத்தின் முடிவை குறிக்கிறது. குளிர்காலத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட பயிர்கள் நன்றாக அறுவடை செய்யப்படவும், விவசாய செழிப்புக்காகவும் மக்கள் சூரியக் கடவுளையும் நெருப்புக் கடவுளையும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நெருப்புக் கடவுளுக்கு எள், வெல்லம் மற்றும் பாப்கார்ன் ஆகியவற்றை படையலிடுகின்றனர். நெருப்பு மூட்டி அதை சுற்றி மக்கள் ஒன்றுகூடி, நாட்டுப்புற இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப் பாடி மகிழ்கின்றனர். பாரம்பரிய லோஹ்ரி பாடல்களை பாடுவார்கள்.

பின்னர் லோஹ்ரி பண்டிகை உணவை உண்டு மகிழ்கிறார்கள். குறிப்பாக எள் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புகள் லோஹ்ரி உணவில் இடம்பெறும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எள், கரும்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றை வழங்கி மகிழ்வார்கள். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான லோஹ்ரி பண்டிகை பஞ்சாப், அரியானாவில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.