செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் நீர்வளத் துறை சார்பில் ரூ. 342.60 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர்தேக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உபவடிவ நிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டனர்.
இந்நிலையில், ரூ.342.6 கோடியில் 6-வது புதிய நீர்த்தேக்க கட்டுமான பணிக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இப்புதிய நீர்த்தேக்கமானது சென்னை வடிநிலப்பகுதியில் உள்ள கோவளம் உபவடிநிலப் பகுதியில் அமையவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையே உள்ள 3010 ஏக்கர் உப்பளப் பகுதி உட்பட மொத்தம் 5161 ஏக்கர் அரசு நிலங்களில் அமைக்கப்படவுள்ளது.
புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ நீளத்திற்கு மண் கரை அமைக்கும் பணி, கோகிலமேடு முகத்துவாரத்திற்கு வெள்ள நீர் செல்வதற்கு ஏதுவாக நீர் தேக்கத்தின் தெற்கு பகுதியில் நீரொழிங்கி அமைத்தல், நீர் உள்வாங்குவதற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கும் தேவையான நீரொழிங்கிகள் அமைத்தல், தேவைக்கு அதிகமான வெள்ள நீரீனை மேற்கு மற்றும் கிழக்கு புற வெளிப்புற வடிகால்கள் மூலம் முட்டுக்காடு மற்றும் கோகிலமேடு முகத்துவாரங்கள் மூலம் வெளியேற்ற வடிகால்கள் அமைக்கும் பணிகள் அமையவுள்ளன. மேலும், பக்கிங்காம் கால்வாய் திருவிடந்தையிலிருந்து மகாபலிபுரம் வரை முற்றிலுமாக சீரமைத்து கடல்நீர் வருவதற்கேற்ப புனரமைக்க உத்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை மக்களுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
மாமல்லன் நீர்தேக்க அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களான சிறு துளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, எச்.சி.எல். அறக்கட்டளை, தன் அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை, ரோப் நிறுவனங்கள், டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை, வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார பிரிவு, அண்ணா பல்கலைக் கழகம் - நீர்வள ஆதார மையம். பிரதான் அறக்கட்டளை, வனத்துக்குள் திருப்பூர், கோவை குளங்கள், பயோட்டா மண் அறக்கட்டளை, தர்மபுரி - ஆதி அறக்கட்டளை ஆகிய அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு சிறந்த நீர் பாதுகாத்தல் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், எம்.பி.க்கள் க.செல்வம், கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொதுப்பணி திலகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.