ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர். இதில் அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்நிலையில், தோல்விக்கு பிறகு ஜோகோவிச்சிடம், உங்களால் இன்னும் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியும் என்று நம்புகிறீர்களா நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜோகோவிச், என்னால் முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். இல்லாவிட்டால் நான் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். இதை பலமுறை கூறி விட்டேன். அரையிறுதியில் ஜானிக் சின்னரை 5 செட்டுகளில் தோற்கடித்ததும், இறுதிச்சுற்றில் கார்லசுடன் 4 செட் வரை நெருக்கமாக வந்ததும் சிறப்பானது. அற்புதமான தொடக்கத்திற்கு பிறகு 2-வது மற்றும் 3-வது செட்டில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது என தெரிவித்தார். 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு ஜோகோவிச் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.