இந்த ஆண்டின் தனது முதல் விண்வெளிப் பயணமான பி.எஸ்.எல்.வி-சி 62 திட்டத்தை நாளை 12-ம் தேதி காலை 10:17 மணிக்கு இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் பாய்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ நாளை காலை 10:17 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி 62 விண்கலத்தை ஏவத் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், பூமியை படமெடுக்கும் ஒரு நவீன செயற்கைக்கோள் ஆகும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மூலோபாய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இது குறித்த கூடுதல் விவரங்களை இஸ்ரோ இதுவரை வெளியிடவில்லை. இத்திட்டத்தில் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஆய்வுக் கருவிகளும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

கடந்த டிசம்பர் 24-ல் எல்.வி.எம். -3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளூபர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு, இஸ்ரோ மேற்கொள்ளும் இந்த ஆண்டின் முதல் பயணம் இதுவாகும். இஸ்ரோவின் நம்பிக்கைக்குரிய ஒர்க்ஹார்ஸ் என அழைக்கப்படும் பி.எஸ்.எல்.வி ராக்கெட், தனது முந்தைய பயணத்தில் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது. கடந்த 2025 மே 18 அன்று நடைபெற்ற அந்தப் பயணத்தின் 3-வது நிலையில் ஏற்பட்ட கோளாறால் திட்டம் முழுமையடையவில்லை. எனவே, அந்தப் பின்னடைவைத் தாண்டி இந்த முறையை வெற்றியாக்க இஸ்ரோ முனைப்புடன் உள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 105-வது விண்வெளிப் பயணம் என்ற பெருமையை இந்த பி.எஸ்.எல்.வி-சி 62 திட்டம் பெறுகிறது.