தஞ்சை: 'தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கான எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு, மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமை வகித்தார். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது; காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வறட்சி நிலவும் இக்காலத்தில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கான எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. எல்லாம் ரீல்ஸ், ரீல் விடும் ஆட்சியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து முதல் 100 நாட்களில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போராட்டங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஏதுமே பார்க்க முடியவில்லை. பட்ஜெட்டிலும், வேளாண் பட்ஜெட்டிலும் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு 'வெற்றி' எனப் பெயரிட்டுள்ளதே இந்த ஆட்சியின் 100 நாள் சாதனையாகும். சென்னையில் சொத்து வரி உயர்ந்ததைப் போல, இன்னும் நிறைய வரி உயரும். இது ஆரம்பம் மட்டும் தான். இவ்வாறு கூறினார்.