பண்டிகைக் காலத்தையொட்டி, மதுரை- பழனி இடையேயும், விழுப்புரம் - திருவண்ணாமலை இடையேயும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், மதுரையில் இருந்து பழனிக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக இரு மார்க்கத்திலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 8.30 மணி அளவில் பழனி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் மதியம் இரண்டு 25 மணி அளவில் பழனியில் இருந்து புறப்படும் ரயில், ஐந்து மணிக்கு மதுரை சென்றடைவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதே போல், திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எட்டு முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை பத்து 10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 11.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் நண்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.