சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நாளை 23-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதே போல் கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிர்வாக குழு கூட்டத்தை ராமதாஸ் கூட்டி ஆலோசனை நடத்தினார். என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.