தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அதை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர் மாநில அளவிலான அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 30-40 நாட்களுக்கு இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் கி.மீ. வரை வாகனங்களில் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த வாகனத்தின் உட்புற கட்டமைப்புகள், தலைவர்கள் அமரும் வசதி, ஹைட்ராலிக் ஏணி மூலம் வாகனத்தின் மேல் வந்து உரையாற்றும் வசதி, வாகனத்தில் இருந்தபடி வெளியில் உள்ள கூட்டங்களை கண்காணிப்பதற்காக அகன்ற டி.வி.யுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. தேர்தல் பிரச்சார வாகனங்களில் தலைவர்கள், நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால் ஏர் சஸ்பென்ஷன் வசதி செய்யப்படுகிறது. அதேபோல பெண் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகைகள் பயன்படுத்துவதற்கான பிரசார வாகனங்களும் மும்முரமாக தயாராகின்றன.