பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என எதுக்கு தேர்தல் நடந்தாலும் கதாநாயகனாக திகழ்வது, அந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் தேர்தல் அறிக்கைகள் தான். எப்படி, வலுவான கூட்டணி அமைப்பது அரசியல் கட்சிகளுக்கு ஒருபுறம் வெற்றியை கொடுக்குமோ, அதே போல் தேர்தல் அறிக்கை மூலம் கொடுக்கும் வாக்குறுதிகளும் மற்றொரு புறம் வெற்றியை எளிதாக்கும்.
ஆரம்பத்தில், புதிய திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அரசியல் கட்சிகள் கொடுத்து வாக்கு கேட்ட காலம்போய், இப்போது கவர்ச்சி அறிவிப்புகளை சொல்லியே வாக்குகளை எளிதாக பெறும் காலம் வந்துவிட்டது. ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தே தேர்தலில் வெற்றி பெற்று வந்திருப்பதை சமீப காலமாக தொடர்ந்து காண முடிகிறது.
ஆனால், இந்த கவர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் எப்போதெல்லாம் இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டதோ, அப்போதெல்லாம் மாநிலத்தின் கடன் அளவும் அபரிமிதமாக உயர்ந்து வந்துள்ளதை காணமுடிகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.9.29 லட்சம் கோடியில் இருந்து ரூ.9.55 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் தலா ரூ.1.94 லட்சம் கடன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படி, கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போனால், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கும்போது, தேர்தல் அரசியலுக்காக கவர்ச்சி அறிவிப்புகள் எல்லாம் தேவையா? என்பதுதான் நாட்டு நலன் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.