புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீமான் எதுக்கு வேண்டும் என்றாலும் பொங்கல் வைப்பார். திராவிடம் இணைந்ததுதான் தமிழ்நாடு. அதனால் திராவிட பொங்கல் கொண்டாடி வருகிறோம். மகராஷ்டிராவில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தவுடன் தமிழர்கள் மீது தாக்குதல் என்று சொல்லி விடுவார். அண்ணாமலை பேசிய இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை.
எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவும் முடியாது. அவர்கள் கூட்டணி போகப்போக தேய்ந்து கொண்டே போகுமே தவிர, பலப்படுத்த எப்போதுமே முடியாது. எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் புதிய கட்சி இணையும் என்று கூறுகிறார். நிறைய கட்சிகள் உருவாகி வருகிறது. லெட்டர் பேட் கட்சிகள், அந்த கட்சிகள் எல்லாம் வரும் என்று கூறி இருப்பார். ஜனநாயகனுக்கு பலரும் குரல் கொடுத்து இருக்கக்கூடிய நிலையில் அது குறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விஜய் குரல் கொடுக்காததை வைத்து அவருடைய தைரியத்தை தெரிந்து கொள்ளலாம்.
1965-ம் ஆண்டு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் பராசக்தி. அன்றைய நிகழ்வுகள் இந்தி எதிர்ப்பு போராட்டம். அப்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு, தற்போதுள்ள காங்கிரஸ் கட்சி வேறு. காங்கிரஸ், தி.மு.க.வினருக்குள் ஆட்சியில் பங்கு தொடர்பாக தற்போது எழுந்துள்ள விமர்சனத்தால் கூட்டணிக்குள் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவரவர்கள் அவர்களது விருப்ப கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு வந்த வருமானத்தை விட தற்போது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிக அளவு வந்துள்ளது. அதில் சிறு துளியை மட்டுமே தந்துள்ளனர். நிச்சயமாக அதிகமாக தொகையை அவர்கள் தரவில்லை.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது கிடைத்த நிதி தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தான் தமிழகத்திற்கு சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைத்தது. அமித்ஷா, மோடி அடுத்தடுத்து தமிழகம் வருகை தந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கு ஏமாற்றத்தத்தை தான் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.