திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த ஐகோர்ட் கிளையின் உத்தரவுக்கு பா.ஜ.க. வரவேற்பு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் எல். முருகன் தனது டுவிட்டரில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, மதுரை ஐகோர்ட்டு உறுதிபடுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். முருக பக்தர்களுக்கும், இந்து சமுதாய மக்களுக்கும், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தீவிர முருக பக்தரான அமரர் பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்திற்கும் உரிய நீதியை இன்றைய நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்தியில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தடைவிதிக்கக் கோரும் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபமேற்ற அனுமதித்து, ஐகோர்ட்டு மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது என தி.மு.க. அரசிற்கு சம்மட்டியடி கொடுத்து, தீபத்தூண் என்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நிலைநாட்டிய கோர்ட்டு அமர்வுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும்,சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.