சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக-வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் நாளை (ஆகஸ்ட் 8) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை. நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக-வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை.
முறையற்ற தொகுதி மறுவரையறையால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே திமுக-வும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் என்பதை நாடறியும். இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது.
புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதால் மேகேதாட்டு விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.