பாங்காக்: தாய்லாந்து பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக்கிற்கு வடமேற்கே உள்ள டெப்சிரின் நோந்தபுரி அருகே உள்ள மேல்நிலைப் பள்ளியில், மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தப்பியோடியுள்ளான். இதில், 3 ஆசிரியர்கள் மற்றும் 3 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கியை எடுத்து வந்து மாணவன் இந்தத் தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதே போன்று கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு தாய்லாந்தில் 17 வயது சிறுவன் ஒருவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.